புதன், 28 செப்டம்பர், 2011

வெளிநாட்டில் இழந்தது ?


பிரான்சில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாடு

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாடு எவ்ரி அகோர மண்டபத்தில் 24 சனி 25 ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முலாவது நாள் நிகழ்வுகளை தென்னாபிரிக்க பிரதிநிதி திரு.மிக்கி செட்டி நாடாவை வெட்டி திறந்து வைக்க மாநாட்டு தலைவர் சரவணையூர்.விசு செல்வராசா கொடியை ஏத்தி மாநாட்டை ஆரம்பித்து.வைத்தார்.
இந்த மாநாட்டில் மலேசியா, தென்னாபிரிக்கா மற்றும் கனடா, அமெரிக்கா, இலங்கை, தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் உலகநாடுகளில் இருந்து பல அறிஞர்கள் கலந்து கொண்டதுடன்,
தாயகத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. மாவை சேனாதிராசா, திரு.சிவஞானம் சிறிதரன், திரு .யோகேஸ்வரன் ஆகியோருடன்,
இலங்கையின் மொழி அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் மோகன், நீதி அமைச்சிலிருந்து பேராசிரியர் அபுசாலி ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினர்.
ஜெர்மனியில் இருந்து வந்த திரு. அன்ரன் மிகவும் சிறப்பான ஆவண கண்காட்சியை அமைத்து இருந்தார்.
முதலாம் நாள் நிகழ்வுகள் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.00 மணிக்கு முடிவடைந்தது. இந்த நிகழ்வில் கவியரங்கம், ஆய்வரங்கம் என மாநாடு வண. தனிநாயகம் அடிகளார் அரங்கில் களைகட்டியது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராசா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்க மாநாடு இரவு 9.00 மணி வரை இடம்பெற்றது.
சிறப்புரைகள், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்வுகளுடன் மலேசியாவில் இருந்து வந்த நடனக் கலைஞர்களின் பரதநாட்டியம், கனடாவில் இருந்து வந்த நடனக் கலைஞர்களின் பரத நாட்டியம், திருமதி லியோனி, திருமதி கற்பகம் மற்றும் பாரிஸ் கலைஞர்களின் பரத நிகழ்வுகள் அரங்கை சிறப்பிக்க, தமிழ் தொலைகாட்சி கலைஞர்கள் இரா.குணாளன் லோகதாஸ் ஆகியோர் வழங்கிய மண்ணைத்தேடி நாடகம் அரங்கில் இருந்தோரை கண்கலங்க வைத்தது.
அத்துடன் திருமறை கலாமன்றம், பாசையூர் முத்தமிழ் கலாமன்றம் வழங்கிய நாட்டு கூத்து போன்ற அற்புதமான கலை நிகழ்வுகளுடன் மாநாடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஈழத்தமிழ் அகதிகளுக்கு சார்பாக இந்திய நீதிமன்றத்தில் தீர்ப்பு

அகதிகள் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக தனியான சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்த அகதி ஒருவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே துவாரகா நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்த சந்திரகுமார் (வயது 39) என்பவர், போலிக் கடவுச்சீட்டு மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற போது புதுடெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆறு மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

சிறிலங்காவில் தனக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று அவர், இந்திய அரசின் நாடுகடத்தும் முயற்சிக்கு எதிராக துவாரகா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை துவாரகா மெட்ரோ பொலிற்றன் மஜிஸ்ரேட் நீதிபதி அருள் வர்மா கடந்த 20ம் நாள் வெளியிட்டார்.

இந்தத் தீர்ப்பில் சந்திரகுமாரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார். அத்துடன்,

“ பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அகதிகளை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. அகதிகளை வரவேற்கும் இந்தியா, அவர்களுக்காக தனியான சட்டம் இயற்ற முன்வராதது வருந்தத்தக்கது.

அகதிகளைக் கட்டாயப்படுத்தி தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பவும் முடியாது.

அகதிகளுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றுவது அவசியம் என்று இந்திய சட்ட ஆணையமும், தேசிய மனிதஉரிமைகள் ஆணையமும் வலியுறுத்தியுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு அகதிகளுக்கு தனியான சட்டம் இயற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று நீதிபதி அருள் வர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதிட்ட சட்டவாளர் முத்துகிருஸ்ணன் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“திகார் சிறையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு சட்ட ஆலோசனை கிடைப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது.

அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாகப் போராட உள்ளேன்.

நீண்டகாலமாக இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பினால் சிறையில் வாடும் இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படமாட்டார்கள் என்று நம்புகிறேன்“ என்று தெரிவித்தார்.